குஷ்பு விவகாரத்தில் அவருக்கு ஆதரவாகக் குரலெழுப்பிய சுகாசினி "கலாச்சாரக் காவலர்களின்" பிரதிநிதிகளால் அலைக்ககழிக்கப்படுவதைத் தொடர்ந்து, குஷ்புவுக்கு ஆதரவாகப் பேசியதாக, தற்போது, சானியா மிர்ஸாவும் சிக்கலில் மாட்டியுள்ளார். விசாகப்பட்டினத்திலிருந்து ஹைதரபாத் வரை, அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறிக் கொண்டு, ABVP (Akhil Bharathiya Vishwarthi Parishad) மற்றும் பெயரில்லா முல்லாக்களின் ஆதரவாளர்களும் (இம்மாதிரி விவகாரங்களில் இவர்கள் ஒரே மாதிரி சிந்திப்பதில் ஆச்சரியம் இல்லை!) பல இடங்களில் பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சானியா படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து, அவரது உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் போட்டுக் கலக்கியதில், சானியா கலங்கிப் போய் பின் வாங்கி விட்டார்!!!
குஷ்பு கூறிய கருத்துக்கள் குறித்து பல பதிவுகள் வந்து விட்டன. இந்தியா டுடே கருத்துக் கணிப்பு குறித்த பேட்டியில் அவர் சொன்னவை இரண்டு விஷயங்கள். ஒன்று, திருமணத்திற்கு முன் பாலியல் உறவு கொள்ள முற்படும் பெண்கள் பாதுகாப்பான முறையை கை கொள்ள வேண்டும். மற்றொன்று, எந்த படித்த ஆணும் தனக்கு வரப்போகும் மனைவி "கற்புள்ளவளாக" (அதாவது, திருமணத்திற்கு முன் மற்றொரு ஆடவனுடன் பாலியல் உறவு கொள்ளாதவளாக) இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். இவற்றை சில ஊடகங்களும், கலாச்சாரக் காவலர்களும் போட்டுக் (திரித்துக்) கலக்கியதில் தமிழகத்தில் குட்டை குழம்பி, சிலருக்கு மூளையும் குழம்பி விட்டது! இக்கருத்துக்களை எதிர்ப்பவர்கள், என்ன செய்திருக்க வேண்டும் ? திருமணத்திற்கு முன் ஒரு பெண் பாலியல் உறவு கொள்ளாமல் இருப்பதன் அவசியத்தையும் (உன்னதத்தையும்), ஓர் ஆண் 'கற்புள்ள' பெண்ணை மனையாளாகப் பெறுவதால் கிடைக்கும் பெரும் சிறப்பையும் மேடை போட்டு விளக்கியிருக்க வேண்டும் (அல்லது அவை குறித்து துண்டு பிரசுரங்களை மக்களிடையே விநியோகித்திருக்க வேண்டும்!) அல்லவா !?! மேற்கூறிய இரண்டையும், தமிழ் கலாச்சாரப்படி, ஆடவர்களுக்கு பொருத்திப் பார்க்கவே கூடாது !!! அவர்கள் சுதந்திரப் பறவைகள் !!!
"ஒருவனுக்கு ஒருத்தி" என்பது நம் தமிழ் கலாச்சாரமாகவே இருக்கட்டும்! நானும் இக்கருத்தை ஆதரிப்பவன் தான்! அதற்காக, சகிப்புத் தன்மை துளியும் இன்றி, செருப்பு, விளக்குமாறு, அழுகிய தக்காளி, முட்டை, கழுதையின் துணை கொண்டு, ஆர்ப்பாட்டமாக கண்டனம் தெரிவித்து, தனிமனித சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் இத்தகைய அராஜகப் போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. முன்பொரு முறை, தேர்தலில் தோற்ற கலைஞர் அவர்கள், தமிழனை "சோற்றாலடித்த ஏதோ" ஒன்றாக
வர்ணித்திருந்தார். அப்போது, எங்கே போயிருந்தனர், இப்போது பயங்கரமாக எதிர்ப்பு தெரிவிக்கும், மான உணர்ச்சி மிக்க, இவர்களெல்லாம் ?
"திருமணத்திற்கு முன் உறவு" என்பது ஒருவருக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம் .... அதனால், ஒரு பெண் சமூகத்தில் சந்திக்க நேரிடும் சங்கடங்களுக்காகவும், அப்பெண்ணின் வாழ்க்கை திசை மாறிச் செல்லக்கூடிய ஆபத்திற்காகவும்! அத்தகைய நிலை ஏற்படாமல் இருப்பது, நன்னடத்தை கொண்டவராக பிள்ளைகளை (ஆண், பெண் ஆகிய இருபாலரையும்!) வளர்ப்பதும், குடும்பச் சூழலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதும் மூலமாக பெருமளவு பெற்றோரின் கைகளிலும், ஓரளவு கல்வி அமைப்பிலும், ஆசிரியர் கைகளிலும் உள்ளது என்பது நிதர்சனம்.
இதைக் கூட புரிந்து கொள்ளாமல், யாரோ தூண்டி விட, இந்த "கலாச்சார மெய்க்காவலர்கள்" 'தையத்தக்கா' என்று குதிப்பதும், மாவட்டம் மாவட்டமாக வழக்கு போடுவதும் போன்ற கேலிக்கூத்து எதுவும் இல்லை. அதே நேரத்தில், சுகாசினி குஷ்புவுக்கு ஆதரவாக நிலை எடுத்ததோடு நில்லாமல், "ஒட்டு மொத்தத் தமிழர்களின் சார்பாக மன்னிப்பு கேட்பதாக" ஸ்டண்ட் அடித்திருக்க வேண்டாம். என் சார்பில் மன்னிப்பு கேட்க அவர் யார் என்பதற்காக இதைக் கூறவில்லை. குஷ்புவை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கையை விட அவர் கருத்தை வெளியிட அவருக்கு முழு உரிமை உண்டு என்று நம்புபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் !!! ஆனால், அவர்களில் பலர் 'நமக்கேன் வம்பு' என்று மௌனிகளாக இருக்கிறார்கள்.
இந்த வார ஆ.விகடனில் மூத்த பத்திரிகையாளர் ஞாநி சிந்திக்கத் தக்க வகையில் சில கருத்துக்களை கூறியிருக்கிறார். அதே போல், சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் துணைத் தலைவர் சுதா ராமலிங்கம், 'மகளிர் உலகம்' என்ற அமைப்பைச் சேர்ந்த அம்மு ஜோசப், வசந்த் கண்ணபிரான், ரித்து மேனன் மற்றும் தேசிய மகளிர் கமிஷன் தலைவர் திருமதி கிரிஜா வியாஸ் ஆகியோர் இத்தகைய கண்டன ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் பெண்களுக்கு எதிராகவே, அவர்களை ஒடுக்குவதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன என்று கருத்து தெரிவிக்கிறார்கள். இன்று, நிதியமைச்சர் ப.சிதம்பரமும், RSS-உம் (?) குஷ்புவுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்கள்.
சுகாசினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோருபவர்களில் ஒருவரான பேராசிரியர் தமிழண்ணல் கூறியிருப்பதைப் பாருங்கள்! "தமிழர்கள் மான உணர்ச்சியும், நாண உணர்ச்சியும் மிக்கவர்கள். இவற்றை இழந்தவர்கள் தான் உளறுவார்கள்" என்கிறார்! கண்டனம் தெரிவிக்கின்ற போர்வையில் ஒரு பெண்ணை இவ்வாறு இழிந்து பேசுவது மட்டும் சரியா ??? பேராசிரியர் பழனியப்பன், தமிழ் மக்களுக்கு கலவியை விட உடல் பெரிது, உயிர் பெரிது, மானம் பெரிது, தமிழும் மானமும் வேறு வேறு அல்ல என்று ஏதேதோ வசனம் பேசி விட்டு, சுகாசினி இவை குறித்து அறியாததற்குக் காரணம் அவர் "வந்த வழி அப்படி" என்கிறார்! பெரியார்தாசன் ஒரு படி மேலே போய், "மனிதர்களின் பிரதிநிதியாக ஆவதற்கு மாடுகளுக்கு தகுதியில்லை" என்று தனி நபர் தாக்குதலில் இறங்குகிறார். கல்வியாளர்களே இப்படி இருந்தால், பாமரனிடம் எப்படி சகிப்புத் தன்மையை எதிர்பார்க்க இயலும் ?!?!
லேட்டஸ்டாக, திருமா விஜயகாந்துக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருக்கிறார்! அதில், நடிகர் சங்க உறுப்பினரான குஷ்பு, சுகாசினி ஆகியோர் பொதுமக்களுக்கு 'எதிராக' கருத்து கூறியதாகவும், பொதுமக்களுக்கு 'விரோதமாக' செயல்படுவதாகவும், அவர்களை சங்கத்தை விட்டு நீக்க வேண்டும் எனவும், இல்லாத பட்சத்தில் தமிழ்நாடு சங்க சட்டப்படி, கோர்ட் மூலம் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் கூறப்பட்டிருக்கிறது! என்னத்த சொல்ல ?!!?
குஷ்புவின் கருத்துக்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தந்து, அவற்றை மிகத் தீவிரமாக எதிர்த்த கலாச்சாரக் காவலர்களின் செயல்களினால், அரசியல் களத்தில் குஷ்பு ஒரு Worthy Adversary என்ற பிம்பம் மக்களிடையே உருவாகி வருவதன் விளைவாக, பிற்காலத்தில், தமிழ்நாட்டுக்கு ஒரு வடநாட்டுப் பெண்மணி முதலமைச்சராக வரக் கூடிய வாய்ப்பு பிரகாசமாக உள்ளது :)
கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான, துளியும் சகிப்புத்தன்மை அற்ற, இப்போக்கை கண்டித்து, கருத்துச் சுதந்திரத்தின் பால் நம்பிக்கை வைத்துள்ள அனைவரும் (ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ...)இப்போது வாயைத் திறக்க விட்டால், கலாச்சாரக் கோவலர்களின் அனுமதியின்றி, பிறகு எப்போதும் வாயைத் திறக்க இயலாத ஓர் அவலமான சூழல் எதிர்காலத்தில் உருவாகி விடும் அபாயம் உள்ளது. தனிமனித கருத்துச் சுதந்திரத்தை கேள்விக் குறியாக்கும் இத்தகைய போக்கு குறித்து, தற்போது நீதிமன்றங்களில் இவ்விவகாரம் தொடர்பாக அனுமதிக்கப்பட்டிருக்கும் பல வழக்குகளின் விசாரணை மற்றும் தீர்ப்பு வாயிலாக, நீதியரசர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
நன்றி: தமிழ் முரசு, குமுதம் ரிப்போர்ட்டர்
நினைவூட்டல்: இப்பதிவைப் படிக்கும் வாசக நண்பர்கள் மறக்காமல், (பின்னூட்டுவதற்கு விருப்பமின்மையோ, நேரமின்மையோ காரணமாக இருந்தாலும்!) தயவு செய்து, தங்கள் ஆதரவையோ எதிர்ப்பையோ +/- வாக்கு வாயிலாக தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் !!!